‘ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி, பண்பாட்டு மானிடவியல் நோக்கில் அமைந்தது. இனவரைவியலே பிரதானம். இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கும் பொழுது, ஜல்லிக்கட்டை காரணமாக வைத்து தமிழர்களின் இனவரைவியலை எழுதப் போவதாகத் தான் நினைத்திருந்தேன். ஆனால், எழுத எழுதத் தான், இது தமிழர்களின் இனவரைவியல் என்ற எல்லையையும் கடந்து, காளையின் இனவரைவியலாக திரண்டு வருவதை நான் கண்டு கொண்டேன்.
அந்த நேரமே, என் கவனம் பல்லுயிர் இனவரைவையல் மீது குவிய ஆரம்பித்தது. Multispecies ethnography என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதை, ‘பல்லுயிரின வரைவியல்’ என்பதா அல்லது ‘பல்லுயிர் இனவரைவியல்’ என்பதா என்ற குழப்பத்திலிருந்து வரிசையாய் பிரச்சினைகள் ஆரம்பித்தன. மானுட மையச் சிந்தனையிலிருந்து விலகி இந்த உலகை இன்னும் கூடுதலான பரிமாணங்களுடன் விளங்கிக் கொள்ள ‘பல்லுயி ரின வரைவியல்’ எனக்கு உதவி செய்தது.
எனக்கும் விலங்குகளுக்கும் ஏழாம் பொருத்தம். நாய் என்றால் பயம். பூனைகளை நான் காரணமில்லாமல் வெறுத்தேன். ஆடு, மாடு, சேவல்களைக் கேட்கவே வேண்டாம். பாம்பு என்று யோசிக்கவே அஞ்சுகிறவன். தவளைகள் சுத்தமாய் ஆகாது. ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையை மட்டுமே என்னால் ஒத்துக் கொள்ள முடிந்தது. இந்த வரிசையில் நோவாவின் பெட்டகத்தையும், பஞ்சதந்திரக் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மாரி செல்வராஜின் படங்களில் மனிதர்களோடு மனிதர்களாக வரும் விலங்குகள் எனக்கு ஆச்சரியம். அதிலும், பரியேறும் பெருமாளில், கருப்பி என்ற நாயைப் போலவே பாத்திரத்தில் வாய் வைத்து நீர் அருந்தும் உறிஞ்சும் பரியனைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விலங்குகளோடு கொள்ளும் நெருக்கம் மனித இயல்பை அழித்து விடும் என்ற பயம் தான் எனக்குள்ளிருக்கும் மிருக வெறுப்பா என்று யோசிக்க ஆரம்பித்தேன். பல்லுயி ரின வரைவியல் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்ன ஆரம்பித்தது.
ஜல்லிக்கட்டுக் காளைகள், மாடுகளிலும் சேர்த்தியில்லாமல் மனிதர்களிலும் சேர்த்தியில்லாமல், தன்னந்தனியே இன்னொரு இணைப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அங்கே, பாம்புகளும் பேய்களும் நடமாடுவதை நேரில் கண்டேன். இதையெல்லாம் எழுத எழுத இந்தப் புத்தகம் விரிந்து கொண்டே சென்றது. இனவரைவியலையும் கடந்து, ஒரு பயணக்குறிபாக இந்நூல் மாறிக் கொண்டிருந்தது..
இதை யார் வாசித்து சொல்ல முடியும் என்று யோசித்த போது என் நினைவிற்கு வந்தவர், பேராசிரியர் ஆ. செல்லபெருமாள். நூலின் கணிணிப்பிரதியை வாசித்து விட்டு அவர் அனுப்பிய குறிப்பு இது. இந்த வார்த்தைகள் நூலின் பின்னட்டையிலும் இடம்பெறுகின்றன.
‘ஜல்லிக்கட்டு குறித்த டி. தருமராஜின் நூல், பன்னெடுங்கால தொடர்ச்சியுடைய ஒரு பண்பாட்டில், தன்னெழுச்சியாக நிகழ்ந்த மாபெரும் கிளர்ச்சியை அறிவையும் உணர்வையும் ஒரு சேரக் குழைத்து எழுதப்பட்ட பின்னை நவீன இனவரைவியலாக விரிகிறது. நூலாசிரியர் சம்பவங்களை அடர்விளக்கமாக மட்டுமே அளிக்காமல் நுட்பமாகப் புரிந்துகொள்ள கோட்பாடுகளோடு பொருத்தி, இதுவரை ஆய்வுக் களங்களில் பயன்படுத்தப்படாத, பகுப்பாய்வு, ஒப்பாய்வு, இலக்கியவியல், இனவரைவியல், கருத்துப்புலப்படுத்தவியல், உளவியல், சமயவியல், அரசியல் போன்ற கலப்பியல் (eclectic) அணுகுமுறையில் எள்ளல் ததும்ப விவரிக்கிறார். இந்த நூல் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் வெறுமனே படிப்போரின் மனத்திரையில் படம்பிடித்துக் காட்டாமல் அவர்கள் ஒவ்வொருவயையுமே அந்தப் பெருநிகழ்வுக்குள் அமிழ்த்திவிடுகின்றது. – மானிடவியலாளர் ஆ. செல்லபெருமாள்.’
