வாசிப்பு : ஈரச்சொற்களின் கவிதைச்சுனை – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி

மதுரை நகரில் சமீபத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர்கள் சந்திப்பு மாநாட்டில் கவிஞர் பிரபுராஜன் அவர்களை எதார்த்தமாகச் சந்தித்தேன்.மென்பொருள் துறையில்பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விட்டு தற்போது வணிகம் செய்துகொண்டிருப்பதாகச் சொன்னவர்  “சொற்களற்ற வேண்டுதல்” எனும் நவீனக் கவிதைகளைஎன்னிடம் வழங்கினார்.சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் விரைவில்  நூலாகமலரவிருக்கிறது என்பதைப் பற்றியும் கூறினார்

கவிஞர் பிரபு ராஜன் அவர்களின் நவீனக்கவிதைகள் என்னைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டதுஅறுபத்தெட்டு கவிதைகளைஉள்ளடக்கிய மிகச் செறிவான கவிதைத் தொகுப்பாய் மிளிர்கின்றன சொற்கள்.

தனது பால்ய காலத்து அனுபவங்களைத் திரட்டி களத்துமேட்டில் குமித்திருக்கும்நெல்மணிகளாய் கவிதைகள்
பொதிந்து கிடக்கின்றன. சமகாலத்தின் போக்குகளை ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கின்றன. சொற்களின் மாயாஜாலங்கள் இன்னும்கூடுதலாகநூலை வளப்படுத்துகின்றன.

கவிஞர் பிரபு ராஜன் கவிதைகளை வாசிக்கிற போது கவிஞர் ஜலாலுதீன் ரூமி தான்நினைவுக்கு வந்தார்.

”எது உன்னை
உயிர்ப்புடனும் மகிழ்வுடனும்
வைத்திருக்கிறதோ
அதனுடன்
எப்போதும் பிணைந்திரு ”


 நூலாசிரியர் கவிதைகளோடு உயிர்ப்புடனும் மகிழ்வுடனும் பிணைந்திருப்பதைக் காணமுடிகிறது.   நெல் அவித்த அண்டாவில் இருந்து சோமாறும் போது மணக்கும்நெல்வாடையாய் என் இதயத்தை
இலகுவாக்கி ரசனை செய்ய வைத்த கவிதைகளில் சில

கண்ணாடிப்பந்தாய்
 பனிநனைத்த புல்நுனியில்
கண்ணாடிப்பந்தாய் அமர்ந்திருக்கிறேன்.
 ஆட்காட்டிவிரலை வளைத்து
பெருவிரலில் இணைத்து சுண்டுகிறாய்
பலநூறு
வைரக்கற்களாய் தெறிக்கின்றேன்…

பனி பெய்த அடர்வனத்தின் விடியல் காட்சியின் படிமங்களை எதார்த்தமாகபுலப்படுத்தியிருக்கிறார். எல்லோரும்
காலைப்பொழுதை லயிப்பது இயற்கைதான்.ஆனால்அதனை கவிதைகளுக்குள் உட்படுத்தி அதற்குள்ளிருக்கும் அழகியல் குறியீடுகளைவிவரித்து போகிற போக்கில் வாசகர்களின் உள்ளத்தைக் கவர்ந்து விடுகிறார்.

வினையூக்கிகள்

பயணச்சீட்டு
சினிமா டிக்கெட்
தடுப்பூசி டோக்கன்கள் என
எல்லா வரிசைகளிலும்
அவர்முறை வரும்போது
தீர்ந்துவிடுகிறது
அந்த பெருநாளின் அதிகாலையில்
இறைச்சிக்கடையிலும்
நடந்தபோது தான்
மலை உச்சியை நோக்கி
நடக்க ஆரம்பித்தார்
சம்சாரி…


வினையூக்கி என்பது ஒரு‌ வினையின் வேகத்தை அதிகரிக்கப் பயன்டுத்துவதை நாம்.ஒருவர் நீண்ட  வரிசையில்காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்துவிடுகிறார்.தனக்கான காலம் வரும்வரை காத்திருந்தும்  தனக்குகிடைக்கப் போகும்தருணத்தில் மாயமாகி விடுகிறது.இது ஒரு மனிதனுக்கு தொடர்ந்து நடந்து கொண்டேஇருந்தால்  என்ன செய்வான்.அவன் மனம் நொந்துஅவ்வாழ்வை வெறுத்து ஒதுக்கிவிடுகிறான் என்பதை உணர்த்துகிறது.

சாட்சிக்காரர்கள்

முழுக்க எரிந்த வீடு
இருளடைந்து கைவிடப்பட்டு நிற்கின்றது
கூடத்தின் கிழக்குசுவரில்
மென்காற்றுடன் விளையாடிக்
கொண்டிருக்கின்றன
இரண்டு வண்ணக்காகிதங்கள்
 அந்த வீட்டின் கதைப்பக்கங்களில்
இருள் மட்டுமே அல்ல
இருளின் நுண்ணிய துளைகளில்
வண்ணவெளிச்சங்களும் பாய்ந்ததை
சாட்சி சொல்ல…
கவிஞர் பிரபு ராஜன் ஒரு சித்திரத்தை நம் கண்கள் எதிரே கொண்டு வருகிறார்.
முழுக்கஎரிந்த சேதமடைந்த வீடும் அதில் இருளும் வண்ண வெளிச்சங்களும் மோதிக்கொள்ளும்கட்டற்ற வெளிகளின் மாய இரவு. அந்த வீட்டிற்குள் புதைந்து கிடக்கும் கதைப்பக்கங்கள்.‌ நீண்ட நெடிய இரவில் இரண்டு வண்ணக் காகிதங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனஎன்றும் பதிவு செய்கிறார். முற்றிலும் சிதைந்த வீட்டில் ஒளிப்பாய்ச்சி இருளைஅகற்றுவதையும் கூறுகின்றன.

நிலவின் கண்பொத்தி

மழைக்காலங்களில்
நனைந்துகிடக்கும்
 பூவுலகை காணவிடாமல்
 நிலவின் கண்பொத்தி கண்பொத்தி
அழைத்துச் செல்கின்றன
கார்மேகங்கள்…


என்னவொரு‌ அழகிய‌ வருணனைகள்.மேகங்களையும் நிலவினையும் எழுதாதவர்கள்யாரிருப்பார்கள் .
கவிஞர்களுக்கு மட்டும் தான் விசாலமான கற்பனைத் திறன் இருக்கும்.
யாவரும் காணும் ஒரு ரம்மியமான காட்சிகளை படம்பிடித்துக் காட்டுகின்றன.

தூர்ந்த குளம்

தூர்ந்த குளத்தின் மரணம்
சட்டென தொடங்கியதில்லை
தொலைதூர பறவைகளுக்கு
நீரில்லை என்று திருப்பியனுப்பிய
அந்த நாளின் இறுதியில்
 குளமே
அதன் முடிவை
திட்டமிட்டிருந்தது…


மேற்காணும் கவிதையில் குமுகத்திற்கு சாட்டையால் அடித்து உரைப்பதாய் மறைமுகமாகவினாக்களை எழுப்புகின்றன.வெண்கல சருவபானையாய் ததும்பி மிளிரும் குளத்தால்நீர்வாழ் உயிரினங்களும் வானம்பாடிகளும்  கால்நடைகளும்தத்தமது தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.நீரில்லை எனில் உழவு இல்லை. உழவு இல்லை எனில் உணவு இல்லை. நீரின்றி அமையாது ‌உலகு என்றுமுப்பாட்டன் வள்ளுவன் வகுத்துரைத்துச் சொல்லிவிட்டுச்சென்றிருக்கிறான்.நீரைப் பாதுகாப்பதும் சேமிப்பதும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும்பங்குண்டு. ஒரு குளம் தூர்ந்து போனால் அதனை மீண்டும் தூர்வாரி,மழைக்காலங்களில்மேகங்கள்அள்ளித்தந்த நீரைப் பெருக்கி எல்லோருக்கும்
கிடைத்திடச் செய்த அறத்தமிழர்நீர்ப்பாய்ச்சிகள் வாழ்ந்த தமிழ்நிலத்தில் சமகாலத்தில் குளங்களும் தூர்ந்து போய்மரணமடைகின்றன என்பதைக் கவிதைகள் சுட்டுகின்றன.

ஏன் கண்ணீர்

கண்ணீர் விழுந்து விழுந்து
உப்பேறிப்போன
தலையணை உறைகளை
அடிக்கடி மாற்றுகிறாய்
அவைகளை கொண்டுவருகின்றன
 நீ வளர்க்கும் மாயப்புறாக்கள்…


நறுக்கென்று சொற்களைப் புடைத்தெடுக்கிறார் . எந்தக் கண் கொண்டு வாசித்தாலும்கவிஞர் பிரபு ராஜன்  மாயப்புறாக்களாக வாசகனின் மனதை கட்டியணைத்து ஈரச்சொற்களின் நவீன மொழியின் முத்தங்களை நடவு செய்கிறார்.

தவ்வையும் முனியனும்

நெறிஞ்சி முற்கள்
ஈச்சஞ்செடி
பனைமரக்கூட்டம் நடுவில்தான்
தவ்வை வீற்றிருக்கிறாள்
மெட்ரோ ரயிலின் கதவுகள் திறந்து
வெளியே காலடி எடுத்து வைத்த போதுதான்
மின்னலென வந்தது
அவள் இருப்பிடத்தின் காட்சிப்படிமம்
வீடுசேரும்வரை கூடநடந்தும் வந்தது
ஊர் சென்றும் சந்திக்காமல் திரும்பினால்
தவ்வையும் முனியனும்
சமிக்ஞையை காற்றில் அனுப்பி
காட்சித்துணுக்கை கண்முன் விசிறிவிட்டு
மறைகின்றனர்.
தவிர
மறுமுறை சந்திப்பில்
முகத்தை திருப்பிக்கொள்கின்றனர்…
மேற்காணும் கவிதை மனிதனுக்கும் தெய்வதிற்கும் இடையில் நடக்கும் ஒரு பெருங்கண்ணோட்டத்தை ஊடறுத்துச் செல்கின்றன.இக்கவிதையை வாசிக்கும் போதுஒவ்வொருவரும் தத்தமது குலதெய்வத்தோடு மனசாட்சியோடு நெருக்கமாய்உரையாடுவதை உணர்த்துகிறது.

பிடாரியிடம் ஒப்படைத்தல்

பிடாரியின் கைகளுக்குள்
குழந்தை கொடுக்கப்பட்டதும்
தாய் பதற்றமுறுகிறாள்


இறங்காமல் இருந்தால் பிடாரிக்கு
இறங்கி ஓடிவந்தால் தாய்க்கு.


பிடாரியின் கண்ணத்தைப்
பிடித்து விளையாடுகிறது குழந்தை


 பிடாரியின் கூந்தலை கலைக்கின்றது
கண்ணத்தால் பிடாரியின் மார்பில் உரசுகிறது
பிடாரியின் முகத்தில்
பிரகாசம் இல்லை


சில நிமிடங்களில்
பிடாரியின் கைகளை விடுவித்து
தாயிடம் ஓடுகிறது


பிடாரி புன்னகைக்கிறாள்…


தனது சொந்த ஊரையே , நிலத்தையோ,குலதெய்வத்தையோ ,கிராம தெய்வங்களையோ , வழிபாட்டுச் சடங்கு சம்பிரதாயங்களையோ,ஆன்மீகநம்பிக்கைகளையோ சுட்டுவதிலும் தவறவில்லை நூலாசிரியர் பிரபு ராஜன்.காவல்தெய்வத்தையும் குழந்தையையும் ஒப்பீடு செய்துமிக நுணுக்கமான  சம்பவத்தை முன்வைத்து சித்திரிக்கின்றன. கவிஞர் பிரபு ராஜன் தனது முதல் கவிதைத் தொகுப்பிலே பக்குவப்பட்டுஉயிர்ப்பான பலஅரிய தகவல்களோடு பகிர்ந்திருக்கிறார்.ஒவ்வொரு கவிதைகளும் வார்த்தைகளும்  தனித்துவமயாய் வெளிப்பட்டு  மிளிர்கின்றன.
நவீன மொழிநடை நன்றாகவந்திருக்கிறது.சொற்கள் கவிதைகளை  ஒய்யார வானத்தில் சருகடித்து பறக்கவைக்கின்றன.வார்த்தைகள் மீண்டும்மீண்டும் வருவதைத் தவிர்த்திருக்கலாம்.குறுங்காட்டில் சிறு பழங்கள் பறித்து  உண்டதாய் மகிழ்ந்தேன்.நிறைய கவிதைகளும்கதைகளும்உங்களிடம் இருப்பது போல் தோன்றுகிறது. தொடர்ந்து எழுதுக.

 – எழுத்தாளர் அய்யனார் ஈடாடி

நூல் குறிப்பு:

நூல்சொற்களற்ற வேண்டுதல் 

ஆசிரியர்கவிஞர் பிரபு ராஜன்

பக்கங்கள்:80

விலை:உரூ 100

பேசகுறள் பதிப்பகம், +91 8056150277

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top