சோ.தர்மன் அவர்களின் சினவயல் குறித்த பார்வை

சினவயல்: நூல் விமர்சனம்

சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் எழுதி அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள “சினவயல்” நாவல் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும்.

222 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் கதாநாயகன் கணேசன் என்பவர் ஆவார். இவர் கற்பனைக் கதாபாத்திரம் கிடையாது. ஒருகாலத்தில் விதி வசத்தால் ஆத்திரப்பட்டு ஆறு கொலைகளைச் செய்து இன்று ஆன்மீகவாதியாக மாறி அமைதியாக நம்மோடு வாழ்ந்துவரும் என் நெருங்கிய உறவினர் அண்ணன் கணேசன் தான் கதை நாயகன்.

ஒவ்வொரு கொலைக்குப் பின்னாலும் உள்ள நியாயங்கள் அல்லது சூழல்கள் நம்பும்படியாக இருக்கின்றன. முதல் இரண்டு கொலைகளும் சூழல்களாலும் அடுத்த நடந்த நான்கு கொலைகள் திட்டமிட்டும் நடக்கின்றன.

கொலைகளைச் செய்துபின் கதாநாயகன் நீதிமன்றத்தில் சரணடைய தலைமறைவாக  இருப்பது, முருகானந்தம் என்ற வழக்கறிஞரின் உதவி, நாயகனின் குடும்பத்தின் அவலநிலை, கொலை செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களின் பழிவாங்கும் உணர்வுகள் ஆகியவை சோ.தர்மன் ஐயாவின் தாய்மாமா சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி ஐயா எழுதிய “வெக்கை” நாவலை நினைவுபடுத்துகின்றன. அந்த வகையில் “சினவயல்” நாவலும் திரைப்படமாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று.

அடக்குமுறைக்கு எதிராக எளிய விவசாயி அரிவாளை ஏந்துவதை எந்த இடத்திலும் எழுத்தாளர் நியாயப்படுத்தவில்லை. கொலைகள் அனைத்தும் சினத்தின் வெளிப்பாடு என்கிறார். சினத்தை அடக்காமல் இருந்ததால் கொலையாளியும் அவன் குடும்பமும் எப்படி சின்னாபின்னாமாகிறது என்பதை தன் கண்டு கேட்ட அனுபவத்தின் வாயிலாக கற்பனை கலந்து படைத்திருக்கிறார் சோ. தர்மன்.

வழக்கம்போல கிராமத்து வாழ்வியலை, கரிசல் இலக்கியக் கூறுகளை நாவல் முழுக்கவே தூவியிருக்கிறார். பல்வேறு பறவைகள் மற்றும் மரபார்ந்த வேளாண் வழக்காறுகளை ஆழ்ந்து கற்க முடியும். மினுத்தாள் என்ற பெண் மூலமாகவும் அவளுக்காக எழுதிய வார்த்தைகளில்  பெரிசு (சோ.தர்மன்)கொஞ்சம் குசும்புக்காரர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

நூலில் சில குறைபாடுகள் இல்லாமல் இல்லை. அவசரமாக புத்தகக் கண்காட்சிக்காக அச்சிட்டதால் என்னவோ அடையாளம் பதிப்பகத்தாரால் எழுத்து பிழைகளைத் தவிர்க்க இயலவில்லை போலும். அதேபோல் ஊர் குழப்பங்கள் வருகின்றன. கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் வாழ்பவர்கள் மட்டுமே அதை உணர முடியும். பிற பகுதியினருக்கும் சில இடங்களில் அந்தக் குழப்பம் தோன்றும். அதேபோல் வழக்கறிஞர் முருகானந்தம் நாவலில் தொடர்சியாக பல இடங்களில் வருகிறார். உண்மையில் அவர் வ. உ. சி பேத்தியை திருமணம் செய்து கோவில்பட்டியில் வாழ்பவர். அவரை இவ்வளவு வெளிப்படையாக குறிப்பிட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

மற்றபடி சோ.தர்மன் என்ற அதிசயப்பறவை இட்ட மற்றொரு பொன்முட்டை “சினவயல்” என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

(அடையாளம் பதிப்பகம்: 94 44 77 26 86 – விலை 280₹)

©முனைவர்.ஆ.சம்பத்குமார்,கோவில்பட்டி

Back To Top